Monday, January 25, 2010

ரஜினிக்கு "ரசிகனாக" இருப்பதில் என்ன தவறு?

விமர்சனங்களை பற்றி என்றும் கவலைப்படாமல் ஒதுக்கி தள்ளும் குறிப்பிடத்தக்கவர்களுள் எனக்கு முன்மாதிரி என்றால் அது ரஜினி தான், பதிவுலகம் வந்த பிறகு தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, முதலில் மன உளைச்சலில் இருந்தாலும் பின் கிடைத்த பல அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியது..எப்போதுமே பிரச்சனைகளை கண்டு துவளாமல் அதில் இருந்தே பாடங்கள் கற்றுக்கொள்கிறேன் இதில் எப்போதும் என்னுடன் வருவது ரஜினியும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் மற்றும் விமர்சனங்களும் தான்.


பொதுவாக அனைவரும் உங்களுக்கு முன்மாதிரியாக யாரை நினைக்கிறீர்கள்? என்றால் அப்துல் கலாம் போன்ற ஒருவரையோ பல சாதனைகள் புரிந்த ஒருவரையோ குறிப்பிடுவார்கள் ஆனால் யாரும் நடிகரை குறிப்பிடமாட்டார்கள் காரணம் பலருக்கு நடிகன் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான், அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு நடிகனுக்கு ரசிகன் என்றாலே என்னவோ தீண்டத்தகாத செயலை செய்ததை போல பார்க்கப்படுகிறது அல்லது நடிகனுக்கு ரசிகனாக இல்லாமல் இருப்பது அறிவாளித்தனமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ரஜினியை போல மசாலா பட நடிகர் என்றால் சொல்லவே தேவையில்லை!

ரசிகன் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் வைத்து இருக்கிறார்கள் இதுவே பலரின் குழப்பத்திற்கு காரணம். ரசிகன் என்றாலே அவன் ஊதாரித்தனமாக இருப்பான் என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளார்கள், இப்படி ஒரு எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு எப்போதும் ரசிகன் என்பவன் தவறாகத்தான் தெரிவான். பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம், பெரும்பான்மை என்பது அதிகமாக இருக்கலாம் ஆனால் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல என்பதை புரிந்து கொண்டால் நல்லது. ரசிகன் என்றாலும் என்னுடைய குடும்ப, அலுவலக கடமைகளை நான் சரிவரவே செய்து வருகிறேன், உடன் ரஜினியையும் ஒரு ரசிகனாக ரசிக்கிறேன். இதில் என்ன தவறு? இதில் ரசிகன் என்ற முறையில் எந்த விதத்தில் மற்றவர்களிடத்தில் இருந்து குறைந்து விடுகிறேன்! அல்லது என்னைப்போல இருப்பவர்கள் குறைந்து விடுகிறார்கள்.


ரஜினி என்றாலே உடன் பல விமர்சனங்கள் வரும் அவர் அப்படி இப்படி என்று ... தெரியாமல் தான் கேட்கிறேன்..இந்த உலகில் 100% உண்மையானவர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்று கூற முடியுமா? தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா? அனைவரையும் திருப்தி படுத்த எவராலும் முடியுமா? இது கடவுளால் கூட முடியாது. அப்படி இருக்கும் போது ரஜினி என்ன செய்து விட முடியும்? அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவரவர் தவறுகள் நடக்கின்றன, நாம் தவறு செய்யவில்லை என்று கருதும் பல விஷயங்கள் நமக்கு கீழே உள்ளவர்களுக்கு பெரும் தவறாக தெரியலாம், தெரியும். பிரபலமாக இருப்பவர்கள் செய்யும் தவறு அதிலும் குறிப்பாக ரஜினியும் செய்யும் அனைத்தும் காரியங்களும் ஊடகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக்கப்படுகின்றன அல்லது மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன.


ரஜினியிடமும் பல தவறுகள் இருக்கும், இதையே ரஜினியே மறுக்க மாட்டார் மறுத்ததில்லை மறுக்கவும் முடியாது, அதற்காக ரசிகன் என்பதால் அவரின் அனைத்து செயல்களையும் ஏற்றுக்கொண்டதாக ஆகி விடுமா? நமக்கு ஏற்புடைய, நமக்கு சரி என்று படுகின்ற செயலை கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் மற்றவற்றை ஒதுக்கி விடுகிறோம். நாம் ஒருவருக்கு நண்பர் என்பதாலே அவர் என்ன செய்தாலும் சரி என்று ஏற்றுக்கொள்கிறோமா! இல்லையே! ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு நட்புடன் தானே இருக்கிறோம், அதே போல ரசிகன் என்பதால் பிடிக்காததை ஒதுக்கி விட்டு நமக்கு பிடித்த செயல்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு! இதில் என்ன கேவலம் இருக்கிறது....இப்படி நினைப்பவர்கள் எண்ணம் தான் கேவலமாக உள்ளது. பலர் ரசிகன் என்ற பெயரில் கேவலமாக நடந்து கொள்வதால் அனைவரும் அப்படித்தான் என்று நினைத்தால்.. அது யார் தவறு! என்னைப்போல இருப்பவர்கள் தவறா! அல்லது அனைத்தையும் ஒரே மாதிரி பார்ப்பவர்கள் தவறா!

நான் ரஜினிக்கு ரசிகன் என்று சொல்வதில் எனக்கு எந்த வித வருத்தமோ அவமானமோ தகுதிக்குறைவோ எதுவுமில்லை, இப்படிக்கூறுவதையே தவறாக நினைக்கிறேன். ரஜினியை ரஜினியாக மட்டுமே ரசிக்கிறேன் மற்றும் பொறுமையையும் யாரையும் குறை கூறாத பழக்கத்தையும் ரஜினியிடமே கற்றுக்கொண்டேன். இதுவரை ரஜினியை எத்தனையோ பேர் கேவலமாக விமர்சித்துள்ளார்கள் விமர்சித்துக்கொண்டுள்ளார்கள் நடிகர்கள் உட்பட. ஒருமுறையாவது ரஜினி அதற்கு திரும்ப அசிங்கமாக பதில் கூறி இருக்கிறாரா! சொல்லப்போனால் இதை போன்ற விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிடுகிறார் என்பதே உண்மை.

தன்னை திட்டியவர்களிடம் கூட பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார். தனக்கு ஒரு விஷயம், திரைப்படம், செயல் பிடித்து இருந்தால் மனம் விட்டு பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே. ரஜினி ஒரு நடிகன் என்பதால் பிரபலம் என்பதால் அவர் அனைத்து விசயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். அவரை கேள்வி கேட்பவர்கள் எவ்வளவு பேர் நேர்மையாக!! இருக்கிறார்கள்? நாம் சரியாக இருந்தால் தானே அடுத்தவரை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்க முடியும்.


முன்பெல்லாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது அல்லது அதை தாங்கக்கூடிய அளவிற்கு மனது பக்குவப்படவில்லை (இப்பவும் ஓரளவு தான்), ஆனால் ரஜினிக்கு நேர்ந்த அவமானங்களை பார்த்து இவர் எப்படி உயிரோடு இருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டு போனேன்! குசேலன் சமயத்தில் இவரை காய்ச்சிய மாதிரி யாரும் எவரையும் காய்ச்சி எடுத்து இருக்கமாட்டார்கள் (குசேலன் சமயத்தில் ரஜினி சரி செய்தது சரியா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக ஒரு இடுகையில் பதில் அளிக்கிறேன் தகுந்த (நியாயமான) காரணங்களுடன்) என்றே நம்புகிறேன், இதே வேறு ஒருவராக இருந்தால் விமர்சித்தவர்களை பற்றி எதிர் பேட்டி கொடுத்து இருப்பார் மற்றும் மற்றவரின் மேல் பழியை போட்டு தப்பித்து இருப்பார். இது எதையும் செய்யாமல் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு இந்த பிரச்னையை கடந்து வந்தார். இந்த ஒரு விஷயம் ரஜினிக்கு அனுபவத்தை கொடுத்ததோ இல்லையோ! எனக்கு அதிகளவில் மன தைரியத்தை கொடுத்தது.


ரஜினி ரசிகன் என்பதால் அவர் செய்யும் அனைத்து செயல்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், அப்படி செய்கிறவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அவர்கள் அரசியல், எழுத்து, விளையாட்டு என்று எங்கும் வியாபித்து இருப்பார்கள் அது மனித இயல்பு. கலைஞர் ஜெ செய்வது அனைத்தும் சரி என்று அவர்களது கட்சிக்காரர்கள் வாதிடுவதில்லையா! சாரு ஜெயமோகன் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் அனைத்து செயல்களுக்கும் காரணம் கூறுவதில்லையா! சச்சினை தெய்வமாக நினைத்து அவருக்காக வாதிடுவதில்லையா! அப்படி பார்த்தால் உலகம் முழுவதும் பெரும்பாலும் தனக்காக அல்லது தங்களுக்கு பிடித்த ஒருவருக்காக தவறு என்று தெரிந்தாலும் தங்கள் ஆதரவை தெரிவித்தே வருகிறார்கள். நானும் பலர் ரஜினியை விமர்சித்த போது ரஜினிக்காக பரிந்து பேசி இருக்கிறேன் அது எனக்கு ஏற்புடையதாக இருந்தால். தவறே செய்யாதவர் கூடத்தான் நண்பராக இருப்பேன்! என்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட நண்பராக இருக்க தகுதி கிடையாது. இதே விஷயம் அனைத்திற்கும் பொருந்தும்.


பொது அறிவாளிகள் மற்றும் பதிவுலக அறிவாளிகள் (பலர் பதிவுலகம் என்ற தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!) பலருக்கு ரஜினிக்கு ரசிகனாக இருந்தால் என்னவோ கேவலமான விசயமாக தெரிகிறது (தற்போது ரஜினி சீனியர் நடிகர் ஆகி விட்டதாலும் புதிய நடிகர்கள் வரவாலும் தற்போது இது குறைந்துள்ளது). எனக்கு புரியவில்லை மசாலா பட நடிகர் என்பதால் ரஜினி எந்த விசயத்தில் குறைந்து விட்டார்! என்னை போல பலருக்கு அவரது படங்கள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இருக்கிறார், அவரது போலித்தனம் இல்லாத எளிமையான நடவடிக்கைகள் அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது, மற்றவர்களை சின்ன வயதினராக இருந்தாலும் மனம் விட்டு பாராட்டும் நல்ல மனசு பிடித்து இருக்கிறது. மற்றவர்களை பற்றி என்றும் குறை கூறாத பெரிய மனது பிடித்து இருக்கிறது. உலக அரங்கில் ஹிந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்கள் என்று நினைத்துகொண்டு இருந்தவர்களுக்கு தனது படத்தின் மூலம் மற்றவர்களை தமிழ் திரையுலகை நோக்கி திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தென் மாநிலங்கள் என்றாலே இளக்காரமாய் நினைக்கும் வடமாநில சேனல்களை தனது ஒரு பேட்டிக்காக இன்னமும் எதிர்பார்க்க வைக்கிறவர். இதை போல் பல விசயங்களை கூறலாம்..இப்படிப்பட்ட ஒருவருக்கு (நடிகருக்கு) ரசிகராக இருப்பதில் எனக்கு பெருமையே!


பொதுவாக திரை ரசிகர்களிடம் வைக்கப்படும் குற்றச்சாட்டு "போய் முதல்ல குடும்பத்தை கவனிங்கப்பா" என்பது தான்..என்னவோ ரசிகனாக இருப்பதால் எல்லோரும் நடிகரை கட்டிக்கொண்டு அழுவது போலவும் மற்ற வேலைகள் எதுவுமே செய்யாதது போலவும், குடும்பத்தை கவனிக்காதது போலவும், வெட்டித்தனமாக திரிவது போலவும், 24 மணி நேரமும் திரையரங்கிலே கிடப்பது போலவும் தாங்கள் ரொம்ப ஒழுங்காக இருப்பது போலவும் "நினைத்துக்கொண்டுள்ளார்கள்". யப்பா! ராசாக்களா எப்படிப்பா உங்களால முடியுது! இதைப்போல பேசுபவர்கள் வாதமே இது தான். இதைப்போல செய்பவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அதற்காக இதைப்போலவே இருப்பவர்கள் தான் அனைவரும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் எப்படி என்பதில் அவரவர் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறதே தவிர நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதில் இல்லை. இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். கண்ணா! நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

பிறந்த நாள் காணும் ஜினிக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


பொதுவாக ரஜினியை கோபக்கார நடிகராகத்தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் அமைதியான கதாப்பாத்திரத்தில் அழகிய ரொமான்ஸ் காட்சிகளில் வாய்ப்பு கிடைத்தால் பட்டயகிளப்புவேன் என்று நிரூபித்த படங்களில் "ஜானி"யும் ஒன்று. இதில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் கூறுவார் ஆனால் ரஜினி தன் நிலை கருதி மறுத்து விடுவார், ஆனால் "நான் பாட்டு பாடுகிறவள் என்பதால் தானே இப்படி கூறுகிறீர்கள்" என்று ஸ்ரீதேவி அழுவதும் அவரை ரஜினி சமாதானப்படுத்தி தன் காதலை தெரிவிப்பார். கண்ணியமாக காதலை வெளிப்படுத்திய காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால் இயக்குனர் மகேந்திரன் எடுத்த இந்த காட்சி மிக முக்கிய இடம் பிடிக்கும். ரஜினி "அதற்குள் என்னை தவறா நினைத்து விட்டீர்களே! ஏன் அப்படி எல்லாம் பேசினீங்க" என்று கேட்க..அதற்கு ஸ்ரீதேவி "நான் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறுவதும் அதற்கு ரஜினி தன் ஸ்டைலில் வேகமாக ஏன்! ஏன்! என்று கேட்க அது அப்படித்தான் என்பது போல ஸ்ரீதேவி உதட்டை குவித்து தலையாட்டுவது..வாவ்! அருமையான இயல்பான காட்சி..உடன் இளையராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை.

No comments:

Post a Comment